ஆகஸ்டு,16-
ஜெயிலர் படத்தில் எந்திர துப்பாக்கிகளை தோளில் சுமந்து சாகசம் செய்த ரஜினிகாந்த், கையில் கம்பு ஊன்றி, போலீஸ் துணையுடன் பாபாஜி குகைக்கு நடந்து செல்லும் போட்டோக்கள் ரசிகர்களை மனம் கலங்க வைத்துள்ளன.
படங்களில் நடித்து முடித்ததும்,பெரிய ஹீரோக்கள் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று ஓய்வு எடுப்பார்கள்.உல்லாசமாய் இருப்பார்கள். ஆரம்பத்தில் ரஜினிகாந்தும் அப்படித்தான் இருந்தார். பத்து, பதினைந்து ஆண்டுகளாக அவருக்கு கேளிக்கைகளில் நாட்டம் இல்லை. இமயமலைக்கு சென்று புனித ஸ்தலங்களில் பூஜை, புனஸ்காரம் செய்து ,ஆண்டவனை வழிபட்டு ஆன்மிகத்தில் பொழுதை கழித்து வருகிறார்.
கொரோனா பாதிப்பால் நான்கு ஆண்டுகளாக புனித பயணம் செல்லாமல் இருந்த ரஜினி, கடந்த வியாழக்கிழமை இமயமலைக்கு பறந்தார். திட்டமிட்ட படி முதலில் ரிஷிகேஷ் சென்ற ரஜினி, அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ரிஷிகளை சந்தித்து உரையாடினார். உத்தரகாண்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டவர், பத்ரிநாத் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து துவாரஹாத்தில் உள்ள யோக்தா சத் சங்கஆசிரமத்துக்கு திரும்பியவர், தேசியக்கொடி ஏற்றி சுதந்திரதினத்தை கொண்டாடினார்.
அவரது பயணத்தின் கிளைமாக்ஸ் நிகழ்வாக பாபாஜி குகை தியானம் இருக்கும். விடுதலை நாளை கொண்டாடி விட்டு, துவாரஹாட்டில் உள்ள பாபஜி குகைக்கு புறப்பட்டார். அங்கு செல்லும் பாதை கரடு முரடானது.ஆபத்து நிறைந்ததும்கூட. அந்தஒத்தையடிப்பாதையில் ரஜினிகாந்த், கையில் கம்பு ஊன்றி ,தரையில் முட்கள் ஏதும் கிடக்கிறதா? என கூர்ந்து கவனித்து , அடிமேல் அடி எடுத்து வைத்து நடந்தார். அவருக்கு பாதுகாப்பாக போலீசாரும் உடன் சென்றார்கள்.
நீண்ட பயணத்துக்கு பின் பாபாஜி குகையை சென்றடைந்த ரஜினி, அங்கு நெடுநேரம் தியானம் செய்தார். கம்பு ஊன்றி,சிறு குழந்தை போல் தலை கவிழ்ந்து, கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் ரஜினி நடந்து போகும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
000