ஆகஸ்டு,16-
சுதந்திர தின விழா மேடைகளில் பொதுவாக அரசியல் வாசம் வீசுவதில்லை. தமது அரசுகள் நிறைவேற்றிய திட்டங்களை பிரதமரும், முதல்வர்களும் பட்டியலிடுவார்கள்.ஆனால் டெல்லி செங்கோட்டையில் நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் பிரச்சார மேடையாக அதனை மாற்றிக்கொண்டார்.
தொடக்கத்தில் அரசின் சாதனைகளை பெருமிதம் பொங்க விளக்கினார். பின்னர் ட்ராக் மாற ஆரம்பித்தார்.’மீண்டும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதி நான் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவேன். உங்கள் முன் உரையாற்றுவேன். நாட்டின் சாதனை அறிக்கையை வெளியிடுவேன்’ என்று கர்ஜித்த மோடி, அடுத்ததாக எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்தார்.
எல்லா மாநிலங்களிலும் அண்மைக்காலமாக அவர் ஆற்றி வரும் உரையின் ,ஜெராக்ஸ் காப்பியாக ,சுதந்திர தின சிறப்புரை அமைந்திருந்தது. ‘’ஊழல்,வாரிசு அரசியல், சந்தர்ப்பவாதம் ஆகியவை நாட்டுக்கு பெரும் தீமைகளாக உள்ளன.அவற்றுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும்.கரையான் போல், நமது
அமைப்பை ஊழல் அரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக போராடுவதுதான் எனது வாழ்நாள் உறுதிமொழி.வாரிசு அரசியல் கட்சிகள் குடும்பத்துக்காக, குடும்பத்தால் நடத்தப்படுகின்றன’ என முழங்கினார்.
பிரதமரின் பேச்சு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. ‘மோடியின் சுதந்திர தின உரை முழுக்க முழுக்க சுயவிளம்பரத்தை அடிப்படையாக கொண்டது.திரித்துக்கூறுதல்,பொய்கள், தெளிவற்ற வாக்குறுதிகள் போன்றவை பிரதமர் உரையில் நிரம்பி வழிந்தது’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்
மோடியின் சுதந்திர தின உரை குறித்து பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் கருத்து கேட்டபோது ‘செங்கோட்டையில் மோடி கொடி ஏற்றுவது இதுதான் கடைசி முறை’’ என ஆவேசமானார்.
செங்கோட்டையைப்போல் பட்டுக்கோட்டையிலும், சுதந்திர தின விழா நிகழ்ச்சி அரசியல் சேற்றைப்பூசிக்கொண்டுள்ளது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள புதுக்கோட்டை என்ற பஞ்சாயத்தில் சுதந்திர தின விழாவை யொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டை கண்டித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘’நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆளுநர் புறக்கணிப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என கிராம சபை தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் கட்சியின் துணை அமைப்பாக தன்னை மாற்றிகொண்டிருக்கிறது.
சுதந்திர தின விழாவில் அற்புதமான காரியம் ஒன்று அரங்கேறி உள்ளதை இங்கே குறிப்பிடவேண்டும்.ஜாதி வன்மம் தலை விரித்தாடும் தூத்துக்குடி,மாவட்டத்தில் உள்ள கிராமம் மேல ஆத்தூர்.இங்கு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில் பங்கேற்றார்
அந்த ஊராட்சியில் ஜாதிகள் பெயரில் 9 தெருக்கள் உள்ளன. இந்த ஜாதி பெயர்களை எல்லாம் மாற்றி விட்டு, பெரும் தலைவர்கள் பெயரை சூட்டலாமே?’ என ஆட்சியர் செந்தில் , ஒரு யோசனையை முன் வைக்க, சற்றும் யோசிக்காமல், ஊர் மக்கள் அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அந்த இடத்தியே தெருக்களின் பெயரில் ஒட்டி இருந்த ஜாதிகளின் பெயர்கள் நீக்கப்பட்டன.
ஜாதி மோதல்களுக்கு முற்றுபுள்ளி வைக்க,மேல ஆத்தூர் கிராமம், பிள்ளையார் சுழி போட்டிருப்பது, நல்ல ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும்.
000