ஆகஸ்டு,17-
திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க மலைப்பாதை மார்க்கத்தில் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இங்கு உலவும் சிறுத்தைகள் பக்தர்களை தாக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன..
மலைப்பாதையில் பெற்றோருடன் சாமி தரிதனம் செய்வதற்காக சென்ற 6 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. சிறுமியை சிறுத்தை வேட்டையாடிய சம்பவத்தையடுத்து, மலைப்பாதையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடிகட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
’’குழந்தைகளுடன் திருப்பதி மலை ஏறும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே படிக்கட்டுகள் மூலம் திருப்பதி மலையேற அனுமதிக்கப்படுவார்கள்’ என அறிவிக்கப்பட்டது.
மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்களின் மலை ஏறக்கூடாது என்றும் தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வனவிலங்களை சமாளிக்கும் வகையில் மரத்தடியையோ அல்லது கட்டையையோ கொண்டு வர வேண்டும் என்றும் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிலையில் மலை ஏறும் பக்தர்களுக்கு. 5 அடி உயர தடியை தேவஸ்தானம் கொடுத்து வருகிறது, சிறுத்தையை அடிப்பதற்கு தடி வழங்கும் அதிரடி திட்டம் மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ சிறுத்தை, கரடி, யானை போன்ற வன விலங்குகளை 5 அடி உயர தடியால் அடித்து விரட்ட முடியுமா?இத்துனூண்டு மரக்கட்டைக்கு சிறுத்தை பயப்படுமா?’’என கேள்வி கேட்கும் பக்தர்கள்,’’விலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மலைப்பாதைகளின் இரு புறமும் இரும்பு வேலி அமைக்க வேண்டும்.’என்றுவேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேவஸ்தானம் செவி சாய்க்குமா?
000