ஆகஸ்டு, 17-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதனையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சோதனை மற்றும் விசாரணையின் போது கிடைத்த தகவல்களையும் சேர்த்து செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை கடந்த வாரம் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28- ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது..
அமலாக்கத் துறை விசாரணையில், முன்பு போக்குவரத்துத் துறை அமைச்சராக வி.செந்தில் பாலாஜி இருந்த போது தனது சகோதரர் ஆர்.வி.அசோக்குமார் மற்றும் உதவியாளர்கள் பி.சண்முகம், எம்.கார்த்திகேயன், அப்போதைய அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களுடன் சேர்ந்து குற்றச் சதியில் ஈடுபட்டது உறுதி ஆகியுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், , இளநிலை உதவியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களிடம் சட்டவிரோதமான முறையில் பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரங்கள் அவரின் வங்கிக் கணக்கு உள்ளிட்வை மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.
000