செப்டம்பர்,07-
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் காலை 8 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி வரை செயல்பட்டு வந்தது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தபோது திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
அன்றைய தினம் சென்னை தி.நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,’12 மணிக்கு ஒருவன் சரக்கு வாங்கி, அதன் பின்னர் பாட்டிலை திறந்து, மிக்ஸ் செய்து அடித்து விட்டு, வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு, தூங்கி எழுந்து,காலையில் எப்போது வேலைக்கு போவான்?’என ஆதங்கப்பட்டார்.
அதன் பின் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது.இப்போது டாஸ்மாக் மதுபான கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. இந்த நேரத்தையும் குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மதியம் 2 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்து இரவு 10 மணிக்குள் மூடுவதற்கு, டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது இரண்டு மணி நேரம் குறைக்கப்படுகிறது.
‘’நேரத்தை குறைப்பதால் ஏற்படும் சாதக-பாதகங்கள் குறித்து பல்வேறு தரப்பிலும், மாவட்ட வாரியாக கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.அதன் பின் இறுதி முடிவு எடுக்கப்படும் ’’என்கிறார், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைஅமைச்சர் முத்துசாமி. ’நேரத்தை குறைப்பது நல்ல விஷயம் ‘ என கொண்டாடுகிறார்கள், பெண்கள்.ஆனால் சட்ட விரோதமாக செயல்படும் பார்கள் 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கின்றன.
கேரளா, புதுச்சேரியுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மதுபானங்களில் விலை ரொம்பவும் அதிகம். ஒவ்வொரு கடைக்கும் விலை வித்தியாசப்படுகிறது. 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக ,குவாட்டருக்கு கேட்கிறார்கள், விற்பனையாளர்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் தினமும் வாக்குவாதமும், மோதல்களும் நடைபெறுகிறது.
’’சட்ட விரோதமாக இரவு நேரங்களில் செயல்படும் பார்களில் பகல் கொள்ளை அடிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை குறைத்தால்,கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விலை மேலும் அதிகரிக்கும்.அந்த பார்கள் இரவில் செயல்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்பது பொதுமக்கள் கருத்து.
000