ஜனவரி-21.
நாம் தமிழர் கட்சித் தலைவா் சீமான் பெருமையாக சொல்லிவந்த பிராபகரன் சந்திப்பு மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால் அவர் மீதான நம்பகத் தன்மை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
திரைப்பட இயக்குநராக அறிமுகமான சீமான் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளராக மாறிய உடன் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்து வந்ததாக கடந்த 2009- ஆம் ஆண்டுக்கு முன்பு தகவல் வெளியானது.
அப்போது “பிரபாகரன் தமக்கு ஆமைக் கறி சமைத்துப் போடச் சொன்னார். ஏகே 47 ரக துப்பாக்கியைக் கொடுத்துச் சுட்டுப் பார்க்கச் சொன்னார், தமிழ்நாட்டின் எதிர்காலம் உன் கையில் தான் இருக்கிறது என்று சொன்னார்” என்றெல்லாம் சீமான் கடந்த 15 ஆண்டுகளாக சொல்லிவருவது தமிழக பொது வெளியில் மிகவும் பிரபலம். மேலும் பிரபாகரனுடன் தாம் இருக்கும் போட்டோ ஒன்றையும் சீமான் வெளியிட்டு இருந்தார்.
இந்த சூழலில் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த வாரம் வெளியிட்ட பேட்டியில் பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படத்தை தான் தான் அப்போது எடிட் செய்து கொடுத்தாக தெரிவித்ததும் சர்ச்சை ஆரம்பமாகி உள்ளது. இதனை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் கடுமையாக மறுத்து வருகின்றனர். சீமான் இதற்கு விளக்கம் எதுவும் வெளியிடவில்லை. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூட இது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
“பிரபாகரனை சந்தித்ததாகக் கூறி சீமான் விளம்பரம் தேடி வந்ததை சங்ககிரி ராஜ்குமார் அம்பபலப்படுத்திவிட்டார் , இப்படி பொய் விளம்பரம் தேடிக் கொள்கிறவர் அரசியலில் ஈடுபடக் கூடாது” என்று அவருடைய எதிர்ப்பாளர்கள் வலைதளங்களில் பதிவுகளை குவித்து வருகின்றனர்.
இதனால் சீமான் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
நடிகர் விஜய் புதிய கட்சித் தொடங்கியதால் சீமானுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது, அவருடைய நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள் என்ற கருத்து ஏற்கனேவே பரவிவருகிறது.
பாஜகவினரை சங்கிகள் என்று மற்றவர்கள் விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு சில மாதங்கள் முன் பேட்டியளித்த சீமான் , சங்கிகள் என்றால் நண்பர்கள் என்று விளக்கம் சொன்னதும் சர்ச்சையானது. அவருக்கு பாஜகவுடன் மறைமுக தொடர்பு இருப்பதால்தான் இப்படி சொன்னார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் வருண் குமார் தாம் தொடர்ந்து உள்ள அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதற்கு தொழிலதிபர் ஒருவரை சீமான் தூது அனுப்பினார் என்று சொல்லியிருந்தார். இதுவும் சீமான் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பதாக இருந்தது.
இப்போது பிரபாகரன் உடனான போட்டோ உண்மையில்லை என்ற கருத்து அவர் மீதான நம்பகத்தன்மையை மேலும் குறைத்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
*