ஜனவரி-22.
கடந்த வாரம் கத்திக்குத்துக்கு ஆளாகி உயிர் பிழைத்த இந்தி நடிகர் சைஃப் அலி கானின் குடும்பத்துடன் தொடர்புடைய, ரூ.15,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்ற உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகராக உள்ள போபால் முன்பு நவாப்களின் ஆட்சியில் இருந்தது. போபாலின் கடைசி நவாப் ஹமீதுல்லா கானுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவரது மூத்த மகள் அபிதா சுல்தான் 1950- இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். இரண்டாவது மகள் சஜிதா சுல்தான் இந்தியாவில் தங்கி, நவாப் இப்திகார் அலி கான் பட்டோடியை மணந்து, சட்டப்பூர்வ வாரிசானார்.
இவர்களின் மகன்தான் மன்சூர் அலிகான் பட்டோடி. புகழ்பெறற் கிரிக்கெட் வீரர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தவர். ரசிகர்கள் இவரை செல்லாமாக டைகர் பட்டோடி என்று அழைப்பார்கள். இந்த டைகர் பட்டோடியின் மகன் தான் நடிகர் சைப் அலிகான். அதாவது போபால் அரச வம்சத்தின் சட்டப் பூர்வ வாரிசு.
சஜிதாவின் பேரன் என்பதால் சைஃப் அலி கானுக்கு அரச குடும்பத்தின் சொத்துக்களில் ஒரு பங்கு கிடைத்தது. இருப்பினும், சஜிதாவின் ( சையிப் அலிகானின் பாட்டி ) அக்கா அபிதா சுல்தான் நாடு பிளவு பட்டபோது பாகி்ஸ்தானுக்கு இடம்பெயர்ந்ததால் அந்த சொத்துக்களை இந்திய அரசாங்கம் உரிமை கோருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.
இப்போது பட்டோடி குடும்பத்தின் பூர்வீகச் சொத்துக்களை அரசாங்கம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான சூழல் அதிகமாகி இருக்கிறது.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், கடந்த 2015 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் இந்த சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது,
இதனால் நடிகர் சயீஃப் அலி கான் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்த ஃபிளாக் ஸ்டாஃப் ஹவுஸ், நூர்-உஸ்-சபா அரண்மனை, தார்-உஸ்-சலாம், ஹபிபியின் பங்களா, அகமதாபாத் அரண்மனை, கோஹெஃபிசா சொத்துக்கள் அரசு எடுத்துக் கொள்ள விரும்பும் சொத்துக்களில் அடங்கும்.
பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த தனிநபர்களின் சொத்துக்களை மத்திய அரசு உரிமை கோர இந்திய சொத்துச் சட்டம் அனுமதிக்கிறது.
போபால் கலெக்டர் கௌஷலேந்திர விக்ரம் சிங், “கடந்த 72 ஆண்டுகால இந்த சொத்துக்களின் உரிமை யாரிடம் உள்ளது என்பதை ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். இந்த நிலங்களில் வசிக்கு தனி நபர்கள் மாநிலத்தின் குத்தகைச் சட்டங்களின் கீழ் குத்தகைதாரர்களாகக் கருதப்படலாம்” என்றும் கூறி இருக்கிறார்.
சட்ட நிபுணர்கள், சிலர் இந்த வழக்கு சிக்கலானது, சயீப் அலிகானின் குடும்பத்திற்கு இன்னும் சட்டப்பூர்வ வழிகள் உள்ளன என்று தெரிவித்து இருக்கின்றனர்.
15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்ட குடும்பத்தின் வாரிசான சயீப் அலிகான், கடந்த வாரம் மும்பையில் கத்திக்குத்துக்கு ஆளானதை அடுத்து அவருடைய சொத்து வழக்குகள் மீண்டும் ஒரு முறை வெளி உலகத்திற்கு தெரியவந்து இருக்கிறது..