இரட்டை வேட ‘ஸ்பெஷலிஸ்ட்’ ஷங்கர் ! தொட்டதெல்லாம் ‘பொன் ‘னாக்கியவர் !

கே.பாலச்சந்தர் ( புன்னகை மன்னன்), பாரதிராஜா ( ஒரு கைதியின் டைரி ), மகேந்திரன் ( ஜானி),கே.பாக்யராஜ் ( அவசரபோலீஸ் ) கே.எஸ்.ரவிகுமார் ( நாட்டாமை ) எஸ்.ஜே.சூர்யா ( வாலி ) ஆகிய இயக்குநர்கள், ஹீரோக்களுக்கு இரட்டை வேடம் அளித்து ரசிக்க வைத்தவர்கள்.

அடைப்புக்குறிக்குள் அடக்கிய சினிமாக்கள், வசூலிலும் குறை வைக்காதவை. அந்த படங்கள் தனிச்சுவை கொண்டவை என்பதோடு, அந்த இரட்டை கேரக்டர்களின் முரண்பட்ட தன்மை, இன்றும், என்றும் மறக்க முடியாதவை.

இவர்களில் இருந்து , பிரமாண்ட டைரக்டர் ஷங்கர், கொஞ்சம் வேறுபடுகிறார். அவர் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட பாதி படங்கள், இரட்டை வேட நாயகன்களை மையப்படுத்தியவை. ஒவ்வொன்றும் ஒரு ரகம் ஒரு விதம். ஒவ்வொன்றாக அலசுவோம்:

இந்தியன்

ஷங்கர் இயக்கிய மூன்றாவது படம் –இந்தியன். முதலிரண்டு படங்களான ‘ஜெண்டில்மேன் ‘ , ‘காதலன்’ ஆகியவை குஞ்சுமோன் தயாரிப்பில், அவர் உருவாக்கியவை.அந்த வளாகத்தில் இருந்து வெளியேறி, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஷங்கர், அங்குலம் அங்குலமாக ரசித்து, ருசித்து உருவாக்கிய படைப்பு ‘இந்தியன்’

அவருக்கு பெரும் துணையாக, தூணாக இருந்தவர்,எழுத்தாளர் சுஜாதா. ஷங்கரின் முதல் இரண்டு படங்களுக்கு உரையாடல் தீட்டியவர் –பாலகுமாரன். முதன் முறையாக சுஜாதா -ஷங்கர் கை கோர்த்த படம்,இந்தியன்.இந்த கூட்டணி சுஜாதா மரணிக்கும் வரை தொடர்ந்தது, தனிக்கதை.
காமெடி, கலகலப்பு, கமர்சியல் வகையறாக்களுக்கு மகன் சந்துருவை ( இளைய கமல் ) பயன்படுத்திக்கொண்ட ஷங்கர், கதையின் கருவை தாத்தா கமல் தோளில் ஏற்றி, படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றார்.

30 ஆண்டுகள் ஆனாலும் , ‘பிரிட்ஜில்’ வைத்த ஆப்பிள் போல், இப்போதும் , தித்திப்பாக ருசிக்கிறது –‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இதில் பெரும் பங்குண்டு.

ஜீன்ஸ்

‘காதலன்’படத்திலேயே ஷங்கருடன், இணைந்திருக்க வேண்டியவர், பிரஷாந்த். இசை அமைப்பாளர்கள் விசுவநாதன் –ராமமூர்த்தி பெயர்களை, இரட்டை நாயகர்களுக்கு சூட்டி இருந்தார், இயக்குநர்.

மெல்லிய காதலை ,மனதை தாலாட்டும் பாடல்களோடு சொல்லிய படம். எனினும், நாசர்-ராதிகா இடையேயான பிணக்கும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்களும்தான், மையக்கரு.

ஒரு பாடலில் உலக அதிசயங்கள் அனைத்தையும், பிரமிக்கத்தக்க அளவில் படமாக்கி, ரசிகர்களை சொக்க வைத்திருந்தார், ஷங்கர். பல ஆண்டுகளுக்கு பிறகு, பெரிய வெற்றிப்படத்தை கொடுத்து, தமிழ் சினிமாவில் தனது இருப்பை , பிரஷாந்த், பதிவு செய்த படம்

இந்த படத்தில் நடிக்க முதலில் விஜயை கேட்டதாகவும் ‘இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தமாக ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாது’ என இளையதளபதி கை விரித்ததால், படம் பிரசாந்துக்கு கை மாறியதாகவும் ஒரு தகவல் உண்டு.

எந்திரன்
லைகா நிறுவனத்துக்காக ,கமலுக்கு, ஷங்கர் தயார் செய்த ‘ரோபோ’ ,அங்கே சுற்றி, இங்கே சுற்றி , கடைசியாக, ரஜினி –சன் பிக்சர்ஸ் காம்போவில், ‘எந்திரன் ‘ஆக சந்தைக்கு வந்தது.

நாயகன் ,வில்லன் என ரஜினி ஏற்ற இரட்டை வேடங்கள், எந்திரனை, பான் இந்தியா சினிமாவாக உயர்த்தி இருந்தது. உயிருள்ள வசீகரனைவிட, உயிரற்ற சிற்றியின் ஆட்டமே, படத்தை கொண்டாட்டமாக கொண்டு சென்றது.

மூச்சற்ற மெஷினை வைத்து உயிர்ப்புள்ள படத்தை கொடுத்த ஷங்கருக்கு எந்திரன் தான், ‘மாஸ்டர் பீஸ்’ என உறுதியாக சொல்லலாம்.
எந்திரத்தின் ,உதிரி பாகங்கள் கழற்றப்படும் போது, மனிதர்கள் கண்ணீர் சிந்திய ஒரே படமாக, இதுவே இருக்கும்.

2-0

ரஜினி –அக்ஷய் குமார்-ஷங்கர்- கூட்டணியில் உருவான ‘2.0’ எந்திரனின் தொடர்ச்சியாகும். ‘3D’ எனும் முப்பரிமாணம், கிராபிக்ஸ் வித்தைகள், போன்றவை இந்த படத்துக்கு புதிய வண்ணத்தை அளித்திருந்தது.

கிளைமாக்ஸ் காட்சியில் சிற்றியின் குட்டிகள் அடிக்கும் ,லூட்டிகள் , சிறுசுகளுக்கு மட்டுமல்லாமல் படம் பார்த்த பெருசுகளுக்கும் கிளுகிளுப்பை ஊட்டியது.

கேம்சேஞ்சர்
ராம்சரணை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஷங்கர், சறுக்கிய படம் .கேம்சேஞ்சர். தெலுங்கில் நெய்தாலும், தமிழ் உள்ளிட்ட வண்ணங்கள் பூசப்பட்டு, விற்பனைக்கு வந்தது.

கலவை சரி இல்லை. ஒட்டு மொத்த கட்டிடமும் தகர்ந்து போனது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *