எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, இரட்டை வேடத்தில் நடித்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘நாடோடி மன்னன்’,’இந்தப்படம் ஓடினால் நான் மன்னன்.. ஓடாவிட்டால் நாடோடி’ என அந்தப்படம் தயாரிப்பில் இருக்கும்போது அவர், பலமுறை ஊடகங்களில் சொல்லி இருக்கிறார்.
‘நாடோடி மன்னன் ‘திரைப்படம் குறித்து சட்டசபையில் சில கருத்துகளை எம்.ஜி.ஆர்.பதிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதி:
‘நாடோடி மன்னன்’படம் குறித்து உறுப்பினர் சுப்பு பேசினார். அந்தப்படத்தின் நான் ஏதோ சொன்னேன் ‘ என பேசியவர், தனக்கே உரித்தான பாணியில் விரைவாக பேசியதோடு, இடைச்செருகலையும் உள்ளே தள்ளினார்.
ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் – இன்று நான் அதிமுகவில் இருக்கிறேன் – ஏழு, எட்டு,10 ஆண்டுகளுக்கு முன்பு எங்கே இருந்தேன் என்பதை சுப்பு மறந்துவிடக்கூடாது –திமுகவில் இருந்தேன் –அங்கு அண்ணாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு , அவரது தம்பியாக இருந்தேன்.
‘நாடோடி மன்னன்’ படத்தை எடுத்தது , 1958 ஆம் ஆண்டு- அந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி வெளியிட்டேன் –அந்தப்படம் வெளிவருமா ? என்று சந்தேகப்பட்டவர்கள் உண்டு – காரணம் ? அதில், அரசியல் கொள்கைகளை அதிகமாக சேர்த்திருந்தேன்.
நேரடியாக திமுக கொள்கைகளை சொல்லவில்லையே தவிர, திமுக கொள்கைகளை எந்த அளவுக்கு சொல்ல முடியுமோ ,அந்த அளவுக்கு சொல்லி இருந்தேன் – ‘குடிசைகள் கூடாது , வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் ‘ என்ற கொள்கையை அதில் சொல்லி இருந்தேன்.
–படிக்கின்ற மாணவர்களுக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வெளியிட்டிருந்தேன் –படித்து முடித்த பிறகு, அவர்களுக்கு வேலை கிடைக்க வகை செய்யும் பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் ‘ என்றும் சொல்லி இருக்கிறேன்
நாடோடி மன்னன் நூறாவது நாள் விழா எஸ்.ஐ.ஏ.ஏ. கிரவுண்டில் கொண்டாடப்பட்டது . படத்தை பார்த்து விட்டு, அறிஞர் அண்ணா விழாவில் கலந்து கொண்டார். அவர் பேசும்போது என்ன சொன்னார் தெரியுமா?
‘ இந்தப்படத்தை எடுக்கும்போது , என்னென்ன சொல்லப்போகிறோம் –என்னென்ன எழுதப்போகிறோம் என்று ராமச்சந்திரன் என்னிடம் கலந்து கொள்ளவில்லை –ஆனால் படத்தை பார்த்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன் ‘ என்றார் , அறிஞர் அண்ணா.
திமுகவின் கொள்கைகளை அந்த படத்தின் நான் சொல்லியதாக ஆயிரக்கணக்கான மக்கள் இருந்த மேடையில் அண்ணா அவர்கள் பேசினார்கள்- நாடோடி மன்னனை பொருத்த மட்டில் ,முழுப்பொறுப்பும் என்னை சார்ந்தது –அந்த கம்பெனியில் நான் பங்குதாரராக இருந்தேன்.
இயக்கியவன் நான் –இரட்டை வேடங்களில் நடித்தவன் நான் –அந்தப்படத்தில், அன்று நான் சொன்னதை, இன்று நிறைவேற்ற விரும்புவது குறைக் கூறத்தக்க ஒன்றா ? சினிமாவில் சொன்ன கருத்துகள், காட்சிகள் எல்லாம் நான் வேண்டுமென்றே புகுத்தியது அல்ல, என்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல – என் கொள்கைகளைத்தான் அவற்றில் சொன்னேன்’என எம்.ஜி.ஆர்.பேசினார்.