அரசியலில் விஜய் போட்ட புதிய பாதை.

‘இளைய தளபதி’ விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு முடிந்து விட்டது. தளபதி இப்போது தலைவர் ஆகியுள்ளார். இன்னும் ஓராண்டில் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் கொள்ள தயாராகி வருகிறார்.

கட்சி நிர்வாகிகள் நியமனத்தில், மற்ற கட்சிகள் போல் இல்லாமல், மாற்றி யோசித்து, புருவம் உயர்த்த வைத்துள்ளார் விஜய்.
இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை முடித்து விட்டு, முழு மூச்சாக, கட்சிப் பணிகளில் இறங்க தீர்மானித்து விட்டார்,விஜய். கட்சித் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இடையேயான பாலம், மாவட்ட செயலாளர்கள், என்பதால் அவர்கள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 234 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கி, 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வகையில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக இதுவரை 19 மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார். வழக்கமான அரசியல் கட்சிகளைப்போல் இல்லாமல் மாற்றுத்திறனாளி ஒருவரையும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் மாவட்டச் செயலாளர்களாக நியமித்திருப்பது அவரது புதுமையான சிந்தனையின் வெளிப்பாடு.

சென்னை தியாகராய நகர் கண்ணம்மாபேட்டையை சேர்ந்தவர், அப்புனு. மாற்றுத்திறனாளி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மன்றத்தில் இருப்பவர். இவரை, தென்சென்னை மாவட்ட தவெக செயலாளராக நியமித்துள்ளார் விஜய்.
பாபு என்ற ஆட்டோ ஓட்டுநரை கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் அமர்த்தியுள்ளார்.
தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகளில் பணபலம் மற்றும் ஜாதி பலம் உள்ளவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கும் நடைமுறையே காலம் காலமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், சாமான்யர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமித்திருப்பது, அரசியலில், விஜய் போட்டிருக்கும் புதிய பாதையாகப் பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், எளிய மக்களிடம், தவெக கட்சியில் தங்களுக்கு மரியாதையும், பொறுப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார் இளைய தளபதி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *