பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் ,அனைத்து ஏரியாக்களிலும் பட்டையை கிளப்பி, வசூலையும் குவித்து வருகிறது.
‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். அந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் அள்ளியது.
இதனையடுத்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்தார், பிரதீப். இன்றைய காலக்கட்டத்து, காதலை பேசிய ‘லவ்டுடே’ ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
முதலிரண்டு படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய, பிரதீப் ரங்கநாதனுக்கு கோடம்பாக்கத்தில் நட்சத்திர அந்தஸ்து உருவானது . அவரை, நாயகனாக வைத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய படம் ‘டிராகன்’.
அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘டிராகன்’ கடந்த 21 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே ‘டிராகனை’ உலகமெங்கும் விநியோகம் செய்தது.
படத்திற்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் குவிந்து வருவதால் பாக்ஸ் ஆபீஸில் ’டிராகன்’ வசூல் மழை பொழிந்து வருகிறது.
‘டிராகன்’ படத்தின் பட்ஜெட் 35 கோடி ரூபாய். முதல் இரு நாட்களில் இந்தப்படம் உலக அளவில் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது,
மூன்றாவது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளியுள்ளது. அதாவது போட்ட பணத்தை முதல் மூன்று நாட்களில் எடுத்துள்ளது, டிராகன்.
ஹஃவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால், ‘டிராகன்’ விரைவில் ரூ.100 கோடி வசூலைத் தொட்டு விடும் என்பது விநியோகதஸ்தர்கள் கணிப்பு.