தமிழக அரசியலை புரட்டிப்போண்ட ஆண்டு 1967. அந்த வருஷம்தான், சட்டப்பேரவை தேர்தலில் , காங்கிரசை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்தது, அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார்.
அப்போது அண்ணா தலைமையில் திமுக நிஜமாகவே ‘மெகா’ கூட்டணி அமைத்திருந்தது.ராஜாஜியின் சுதந்திரா , காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக், மபொசியின் தமிழரசு கழகம், பார்வர்டு பிளாக்,கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் , திமுக அணியில் அங்கம் வகித்தன.
இந்த கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது . 67 ஆம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாடு, திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டில் கலந்து கொண்ட எம் ஜி ஆர்,, தேர்தல் நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். அந்த மாநாட்டில் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது :
‘ எம் ஜி ஆரிடம் இருக்கும் பணம் என்னுடைய பணம் போன்றது –அது எங்கேயும் போகாது –வேண்டும்போது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி கொள்வேன்
ஆனால் எம் ஜி ஆரிடம் நான், இப்போது பணம் கேட்கவில்லை.வேறு ஒன்று வேண்டும்- அவர் எனக்கு 30 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும்.
ஒரு மாதம் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து , திமுக அணிக்கு ஆதரவு திரட்ட வேண்டும் – அவர் முகம் காட்டினால், ஒவ்வொரு தொகுதிக்கும் 30 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும்- அது எனக்கு தெரியும்’ என அண்ணா சொன்னபோது,மைதானத்தில் திரண்டிருந்த பெரும் திரள் கூட்டம் ஆர்ப்பரித்தது. கை தட்டல் விண்ணை அதிர வைத்தது.
காங்கிரசை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வரப்போவதற்கான அறிகுறியாகவே, அந்த கரவொலியை தலைவர்கள் பார்த்தனர்.
— —