தங்க நகை விற்பனைக்கான புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமல் – மீறினால் அபராதம், தண்டனை என எச்சரிக்கை

நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் நகைகளுக்கு கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்தியாவில் பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத்தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என நகைக்கடைகளுக்கு மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து பேசிய பி.ஐ.எஸ் எனப்படும இந்திய தர நிர்ணய அமைப்பின் சென்னை பிரிவுத்தலைவர் பவானி, பி.ஐ.எஸ் என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவினியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும் என்றார்.

மேலும், இது பொருட்களுக்கான தர உரிமம் (ஐ.எஸ்.ஐ. முத்திரை), மேலாண்மை திட்டச்சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வக சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், ஹால்மார்க் திட்டத்தின் நோக்கம், கலப்படத்திற்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமான தரத்தை பேணுவதைக் கட்டாயப்படுத்துவது என்பதாகும். தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம். இந்தியாவில் முதற்கட்டமாக 288 மாவட்டங்களில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.

தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை என்பது பி.ஐ.எஸ். (இந்திய தர நிர்ணய அமைவனம்), தங்கத்தின் தூய்மை, நேர்த்தி மற்றும் 6 இலக்க தனித்த அடையாள எண் ஆகிய 3 அடையாளங்களைக் கொண்டது. BIS CARE எனப்படும் செயலியில் உள்ள VERIFY HUID என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை நுகர்வோர்கள் சரிபார்த்துக்கொள்ள முடியும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

அதேபோல், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை அங்கீகாரம் பெற்ற மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களில் வாடிக்கையாளர்கள் 200 ரூபாயை கட்டணமாகச் செலுத்தி பரிசோதனை செய்துகொள்ளலாம். மத்திய அரசின் உத்தரவுப்படி, இன்று முதல் நகைக் கடைகளில் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பது கண்டறியப்பட்டால், நகைக் கடை விற்பனையாளருக்கு ஓராண்டு சிறை மற்றும் விற்கப்பட்ட நகையின் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *