நாடு முழுவதும் அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் தொற்று பாதித்த 25,587 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர்களில் 2,826 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 6 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையானது 5,000-ஐ தாண்டியுள்ளது.
இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன.
இந்த நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். உயர்மட்ட அதிகாரிகள் அளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்களும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.