கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் பாஜக தேர்தல் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக தேர்தலுக்கான கட்சியின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கர்நாடக தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். ஏற்னகனவே 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 58 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.