கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கோவிலின் உள்ளே வழிபடச் செல்லும், தான் அணிந்திருந்த காலணியை கழட்டி, உதவியாளரிடம் கொடுத்து எடுத்துச் செல்லக்கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18ஆம் தேதி சாகை வார்த்தை நிகழ்ச்சியுடன் தொடங்கவுள்ளது. மே மாதம் 2ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாலி கட்டுதல் நிகழ்ச்சியும், அதற்கு அடுத்த நாள் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
இதனையெட்டி, திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றார். அப்பொழுது கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு, தனது காலணியை கழட்டி, அருகில் இருந்த தனது உதவியாளரை அழைத்து எடுத்துச் செல்லுமாறு ஆட்சியர் கூறினார். அதனை தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் அங்கிருந்து எடுத்துச் சென்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஷரவன் குமார், ஏற்கனவே கோவை மாநகராட்சியின் ஆணையராக பணிபுரிந்துவந்தபோது, கணியாமூர் ஸ்ரீமதி உயிரிழப்பு கலவரத்தின் போது இங்கு ஆட்சியராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.