தமிழ்புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோடி பேச்சு

உலகின் பழமையான மொழி தமிழ் – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம்

உலகின் பழமையான மொழி தமிழ் என்றும், ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, டெல்லியில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆண்டு தோறும் தனது இல்லத்தில் புத்தாண்டு விழாவை நடத்தி வருகிறார்.அந்த வகையில், தமிழ் புத்தாண்டையொட்டி டெல்லி காமராஜ் லேன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய ஒன்று. வரலாற்றில் தமிழ் மொழியும்,கலாச்சாரமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் மொழி குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமையடைகின்றனர். தமிழ் சினிமா சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளது.

குஜராத் எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது, அங்கு நிறைய தமிழ் மக்கள் வசித்தனர். அவர்கள்தான் எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக்கினர்.குஜராத்தில் வாழ்ந்த தமிழர்களுடன் பழகிய நேரத்தை மறக்க மாட்டேன். இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. புதிய இந்தியா உருவாவதற்கும்,அதன் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு அளப்பறியது. மருத்துவம், சட்டம்,கல்வி ஆகிய துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

தமிழின் பாரம்பரியத்தை ஊக்குவிப்பது என் கடமை. அதற்கு நீங்கள் அளித்திருக்கும் வாய்ப்பு இது. ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியின் பெருமைகளைப் பற்றி எடுத்துரைக்கையில் உலக தமிழர்கள் மகிழ்ந்ததை நான் அறிவேன். ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றுள் தமிழ்நாட்டில் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றிய பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் காலச்சாரம் இந்தியாவை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நாட்டின் பன்முக தன்மையை கொண்டாடுவதற்கான சான்று.

உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்திலிருந்து இருந்து சிங்கப்பூர் வரை, தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் தம்முடன் சுமந்து சென்ற தமிழ் மக்களை பார்க்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *