நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் முதலை இருந்த குளத்தில் குட்டியுடன் தண்ணீர் குடிக்க சென்ற காட்டு யானை ஒன்று, முதலையிடம் சிக்கிய குட்டியை பாதுகாக்க போராடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கேரள மாநிலம் வயநாடு வனவிலங்கு சரணாலயம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகிய மூன்று மாநில வனப்பகுதியின் எல்லையில் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள், புலிகள், முதலை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையில் நிறைந்த ஒரு குளத்தில் முதலை ஒன்று பதுங்கி இருந்தது. இதை சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர் பார்க்காத நேரத்தில், பிறந்து இரண்டு மாதங்கள் ஆன குட்டி யானையுடன் தாய் காட்டு யானை ஒன்று அந்த குளத்தில் நீர் பருக வந்தது.
அந்த குட்டி யானை குளிக்க குளத்துக்குள் இறங்கிய நிலையில் , தாய் யானையும் நீரை அருந்தியவாறு குளத்தில் இறங்கியது. அப்போது, குளத்தில் பதுங்கியிருந்த முதலை ஒன்று குட்டியை பிடிக்க முயன்றது. இதனால் ஆக்ரோஷமடைந்த தாய் யானை முதலையை தாக்கி விரட்டியடித்து, குட்டியுடன் அந்த இடத்திலிருந்து திரும்பிச் சென்றது.
யானையின் உணர்வுப்பூர்வமான தாய்மைப் போராட்டத்தை பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குள் சென்ற சுற்றுலா பயணி தனது செல்போனில் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.