தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடைபெற்ற பேரணியில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் காக்கி சீருடை அணிந்து பங்கேற்றனர்.. சென்னையில் கொரட்டூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் மத்திய அமைச்சா எல்.முருகன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தென் மண்டலத் தலைவர் வன்னியராஜன், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் சாதி வேறுபாடுகள் பார்ப்பதில்லை என்று கூறினார்.
கோயம்புத்தூரில் பொன்னையராஜபுரத்தில் துவங்கிய பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்து ராஜ வீதி தேர்முட்டித் திடலில் நிறைவடைந்தது. பேரணியில் ஆர். எஸ். எஸ். அமைப்பினர் மற்றும் பாஜக,இந்து முன்னனி,இந்து மக்கள் கட்சி என சங் பரிவார் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சத்ரபதி வீரசிவாஜியின் 350 ஆவது முடி சூட்டிய விழா ,அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200- வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட பேரணியில் பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஊர்வல பாதை முழுவதும் கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.காவி கொடியை கையில் ஏந்தி சென்ற தொண்டர்களுக்கும் பாரதமாதா, ஹெக்டேவர், கோல்வார்க்கர் போன்றோரின் உருவ படங்களுடன் வந்த வாகனத்திற்கும் வழி நெடுகிலும் திரண்டிருந்த பெண்கள் மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர்.
பேரணியின் நிறைவில் ராஜவீதி தேர்நிலைத்திடலில் ஆர் எஸ் எஸ் பயிற்சி மற்றும் வீர சாகச பயிற்சிகள் நடத்தப்பட்டு பொது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்,மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதே போன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.