ஏப்ரல்.17
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கோடையிலும் தண்ணீர் கொட்டி வருவதால் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க விடுமுறை நாட்களில் மக்கள், தங்கள் குடும்பத்துடன் அருவிகளில் சென்று குளிப்பதை விரும்புகின்றனர்.
அந்த வகையில், கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறை என்பதால், திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்திருந்த சுற்றுலா பயணிகள், அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். விடுமுறையை அருவியில் குளித்து கொண்டாட குவிந்த கூட்டத்தால், திருமூர்த்திமலைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.