பஞ்சாப் மாநிலம் பதிண்டா வில் இந்திய ராணுவ முகாமில் நான்கு பேர் எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று பிடிபட்ட ராணுவ வீரர் வாக்குமூலம் அளித்து உள்ளார். கடந்த 12 ஆம் தேதி விடியற்காலையில் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
ராணுவ முகாமுக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு என்பதால் பதிண்டா நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிகழ்வு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 28 குண்டுகளுடன் இருந்த துப்பாக்கி ஒன்றும் மாயமானது. இரண்டு நிகழ்வுகள் குறித்தும் நடைபெற்ற விசாரணையில் தேசாய் மோகன் என்ற ராணுவ வீரர் ஆயுதக் கிடங்கில் துப்பாக்கியை திருடியதும் பின்னர் அதிகாலை பொழுதில் நான்கு வீரர்களை சுட்டுக்கொன்றதும் தெரியவந்து உள்ளது.
பலியான நான்கு வீரர்களும் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தேசாய் மோகன் கூறியிருக்கிறார். அவர்களின் தொந்தரவை தாங்க முடியாததால்தான் சுட்டுக் கொல்லுவது என்ற முடிவை எடுத்த தாகவும் அவர் தெரிவித்து உள்ளார். தேசாய் மோகனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.