சென்னையில் மேலும் ஒரு நிதி நிறுவனம் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செம்பியம் தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடிப் புகாருக்கு ஆளாகி உள்ள தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம்,
செம்பியம் பாரதி சாலையில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இவர்கள் 12 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் பேரிடம் 200 கோடி ரூபாய் வரை பெற்று உள்ளனர். ஆனால் கடந்த ஒரு வருடங்களாக வட்டியையும் கொடுக்கவில்லை. அசலையும் திருப்பித் தராமல் போக்கு காட்டி வந்து உள்ளனர்.
ஏமாற்றப்பட்டதை தாமதமாக அறிந்த 500 பேர் சென்னை பெருநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கியமான ஆவணங்கள் மற்றும் சொத்துப் பத்திரங்கள் சிக்கி உள்ளன. இதன் பிறகு மோசடி நிறுவனத்தின் உரிமையாளர்கள் வசந்தி , சக்தி , கண்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். பிறகு மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.
ஆருத்ரா கோல்டு கோஸ்ட, ஏ.ஆர் . ஜுவல்லர்ஸ் போன்ற நிறுவனங்கள் செய்து உள்ள மோசடிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கையில் இப்போது செம்பியம் நிறுவனம் செய்துள்ள மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.