கோடை சீசன் எதிரொலி – மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல்.18

கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவித்துள்ளார்.

கோடை விடுமுறை வருவதால் வரும் நாட்களில் ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மேட்டுப்பாளையம் நகரில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. பாரத் பவன் ரோடு – ரயில்வே ஸ்டேஷன் ரோடு – சிவம் தியேட்டர் – சக்கரவர்த்தி ஜங்ஷன் வழியாக நீலகிரிக்கு செல்ல வேண்டும்.

நீலகிரியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ராமசாமி நகர் – பாலப்பட்டி – வேடர் காலனி – சிறுமுகை ரோடு – ஆலங்கொம்பு ஜங்ஷன்- தென்திருப்பதி 4 ரோடு – அன்னூர் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்.

நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் பெரிய பள்ளிவாசல் – சந்தக்கடை – மோத்தைபாளையம் – சிறுமுகை ரோடு – ஆலங்கொம்பு – தென்திருப்பதி 4 ரோடு சந்திப்பு வழியாக திருப்பிவிடப்படும்.

மேட்டுப்பாளையம்-சிறுமுகை இடையே ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்படும். சத்தியமங்கலம் – பண்ணாரி – ஈரோட்டிலிருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புவோர் ஆலங்கொம்பு – தென் திருப்பதி 4 ரோடு – அன்னூர் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த போக்குவரத்து மாற்றத்தையொட்டி மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்தை சீரமைக்க தேவையான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *