ஏப்ரல் 18
தேஜஸ்வி யாதவ் அதிக் அகமதுவை அதிக் ஜி என்று குறிப்பிட்டது முஸ்லிம் திருப்திப்படுத்தும் அரசியல் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமையன்று பிரபல தாதாவான அதிக் அகமதுவையும், அவரது சகோதரர் அஷ்ரப் அகமதையும் போலீசார் பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் அதிக் அகமது பேசிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை போலக் காட்டி கொண்ட சிலர் அவர்களின் அருகே வந்து துப்பாக்கியால் அவர்களை சுட்டுக் கொண்றனர். உத்தர பிரதேசத்தில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பீகாரின் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ஒரு பிரதமரின் (ராஜீவ் காந்தி) கொலையாளிகள் கூட நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். உத்த பிரதேசத்தில் நடந்தது அதிக் அமகதுவின் மரணம் அல்ல, சட்டத்தின் மரணம். இந்த சம்பவம் ஸ்கிரிப்ட் போல் தெரிகிறது. உத்தர பிரதேசம் சமீபத்திய வரலாற்றில் அதிகபட்ச வரலாற்றில் அதிகபட்ச காவலில் வைக்கப்பட்ட மரணங்களை காண்கிறது. இவை அனைத்தும் மலிவான பிரபலத்தை பெறுவதற்காக செய்யப்படுகின்றன என்று தெரிவித்தார்.
தேஜஸ்வி யாதவின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பீகார் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிகில் ஆனந்த் கூறுகையில், தேஜஸ்வி யாதவ் அதிக் அகமதுவை அதிக் ஜி என்று குறிப்பிட்டது, ஒசாமா பின்லேடனை ஒசாமா ஜி என்று அழைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிகரானது. இது முஸ்லிம் திருப்திப்படுத்தும் அரசியல், இது துரதிர்ஷ்டவசமானது. முக்தார் அன்சாரி மற்றும் அதிக் அகமது போன்ற குற்றவாளிகள் எப்போதும் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு மரியாதைக்குரியவர்கள் என்று தெரிவித்தார்.