ஏப்ரல்.20
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளை காவல்துறையினர் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அங்கு பணியில் இருந்த ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்ளிட்ட காவல்துறையினர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, பின்னர் பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பல்வீர்சிங் மீது, நெல்லை குற்றப்பிரிவு போலீசார், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்தனர். நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்போது இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக, ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா தலைமையிலான உயர் மட்ட குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த உயர் மட்ட குழுவினர், இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும், என்று பரிந்துரை செய்திருந்தனர். அதன்படி, விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.