கொரோனா காய்ச்சலுக்கு இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 40 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 40 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட கொரோனா கேஸ்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்ததற்கு பிறகும், இப்படி திடீரென கொரோனா கேஸ்கள் உயர என்ன காரணம் என்று தெரியாமல் மருத்துவர்களே விழிபிதுங்கி நிற்கின்றனர். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் கொரனோ பாதிப்புகளுடன் நூற்றுக்கணக்கான புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்பட்டு விடுமோ என்கிற பயம் அனைவரிடமும் எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது பரவி வரும் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், குழந்தைகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் தானாகவே மருந்து கொடுக்காமல், மருத்துவர்களை உடனே அணுகுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, பெரியவர்களையும் காய்ச்சலுக்கு சுய மருத்துவம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நாடு முழுவதும் ஒரே நாளில் 12,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65,286-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மட்டும் கொரோனா காய்ச்சலுக்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நடப்பாண்டு 5 மாநில தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் தொற்று பரவல் கணிசமாக அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக்குவது குறித்து விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், திருமணம் – துக்க நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஆட்களை அனுமதித்தல் ஆகியவை தொடர்பாக கூடிய சீக்கிரமே முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.