ஏப்ரல்.22
தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு 720 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வரும் 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி,பொன்னிவாடி,எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 120 நபர்களிடம் நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு நல்லதங்காள் அணை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த அணை கட்டுவதற்கு நஷ்ட ஈடாக ஒரு ஏக்கருக்கு 9,000 ரூபாய் மானாவாரி பூமிக்கும், ஒரு ஏக்கர் தோட்ட பூமிக்கு 27000 ரூபாயும் நஷ்ட ஈடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மேற்படி தொகை மிகவும் குறைவாக இருந்ததால், விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து நஷ்டஈடு தொகை அதிகம் பெறுவதற்கு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மானாவாரி பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாயும், தோட்ட பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாயும் மேற்படி தொகைக்கு 15 சதவீத வட்டியும், ஆறுதல் தொகை மற்றும் கூடுதல் சிறப்பு தொகை மற்றும் செலவு தொகையை வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில், நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளில் இதுவரை 120 விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்காததால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எழுகாம்வலசு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிலம் கொடுத்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அதில், 120 விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி வருகின்ற 13-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டது.