ஏப்ரல்.25
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், கிராம செவிலியர்கள் மூலம் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது. மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. இந்த கொரோனா தொற்றானது, கர்ப்பிணிகள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் மற்றும் முதியவர்களை எளிதில் பாதிக்கிறது. இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள் கிராம செவிலியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா, கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது கூடுதலாகக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தாலும் உடனடியாக கிராம செவிலியர்களுக்கு தகவல் அளிக்க கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற லேசான அறிகுறிகள் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைகள் மேற்கொண்டு உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கர்ப்பிணிகளுக்கு பெரியளவில் பாதிப்பில்லை. இருப்பினும், எளிதில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.