ஐ.நா வேண்டுகோளை நிராகரித்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்கராஜுக்கு தூக்குத் தண்டனையைச் சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நபருக்குச் சிங்கப்பூர் அரசு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சுமார் ஒரு கிலோ போதைப் பொருளைக் கடத்தியதாகக் கடந்த 2013 ஆம் ஆண்டு இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியதாகத் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜ் சுப்பையா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
தங்கராஜிடமிருந்து நேரடியாகப் போதைப் பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், கடத்தலை செல்போன் மூலம் ஒருங்கிணைத்ததாகக் கூறி, அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தங்கராஜ், நீதிமன்றத்தில் தன்னுடைய செல்போன் தொலைந்ததாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், வழக்கறிஞர்களின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் தங்கராஜின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. தொடர்ந்து, அவரின் உறவினர்கள் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை நிருத்தி வைக்குமாறு செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த சூழ்நிலையில், தங்கராஜுக்கு எதிரான தண்டனையை நிறுத்திவைக்குமாறு, சிங்கப்பூர் அரசுக்கு, ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கு முரணானது என கூறியுள்ள அந்த அமைப்பு, மரண தண்டனையைத் தொடரும் நாடுகள் மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே அதை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மரண தண்டனைகளுக்கு எதிராக இருக்கும் சமூக ஆர்வலர்களும், இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்கும் அளவிற்கு போதுமான ஆதாரங்கள் பாதிக்கப்பட்டவர் மேல் இல்லை தெரிவித்துள்ளனர். அனைத்து எதிர்ப்புகளையும் மீறி தங்கராஜுக்கு இன்று சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சிங்கப்பூர் அரசு போதைப்பொருள் வழக்குகளில் கடுமையான தண்டனைகளை வழங்கிவருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்குச் சிங்கப்பூர் அரசு மரண தண்டனை வழங்கியுள்ளது.