சர்ச்சைக்குரிய ஆடியோ தொடர்பாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வீடியோ பதிவு மற்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
12 மணி நேர வேலை சட்டத் திருத்தம், Dmk Files, திருமண மண்டபங்களில் மதுபான விருந்துக்கு அனுமதி விவகாரம், ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை, நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா என தொடர்ந்து திமுகவிற்கு அரசியல் நெருக்கடி இருந்து வரும் வேளையில் முதலமைச்சர் குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட இந்த பிடிஆர் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று பரவிவருகிறது. அந்த ஆடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதியும், அவரது மருமகனான சபரீசனும் கடந்த இரு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்துவிட்டனர் என்கிற செய்தி வைரலாக பரவியது
சர்ச்சை ஆடியோ குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளதோடு, தான் பேசியது போன்று வெளியான ஆடியோ போலியானது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், முக்கிய நிதி சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை, வெறும் இரண்டே ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம். திராவிட மாடலை ஜீரணிக்க முடியாத சிலர்தான் இதுபோன்ற மலிவான தந்திரங்கள் கொண்ட போலியான ஆடியோ ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த தலைமுறையின் மாபெரும் நம்பிக்கை உதயநிதி ஸ்டாலின். எனக்கு சபரீசன் மிகவும் நம்பகமான ஆலோசகர். நான் பேசியதாக வெளியான ஆடியோ ஒளிப்பதிவு முழுக்க முழுக்க சித்தரிக்கப் பட்டவை. இது போன்ற ஒலிப்பதிவுகள் உலக அளவில் கிடைக்கின்றது. பிளாக்மெயில் இலட்சியம் கொண்ட கும்பலின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. நாங்கள் அனைவரும் ஒரு இயக்கமாக, ஒரு குடும்பமாக இருக்கிறோம் என பிடிஆர் பழனிவேல் தியாகர்சான் தெரிவித்துள்ளார்.