சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைக்கவும், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளவும், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வரவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் செய்தித்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023) இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை 5.6.2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.