பொன்னியின் செல்வன் ஒன்றைப் போன்று இரண்டும் ரசிகர்களை ஈர்த்து இருப்பதை முதல் நாளன்று திரையரங்குகளில் காண முடிந்தது.
ஆனால் முதல் பாகம் 50 விழுக்காடு, கல்கியின் நாவலோடு ஒத்துப் போனது என்றால், இரண்டாவது பாகம் முப்பது விழுக்காடுதான் ஒத்துப் போகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் ஆதித்திய கரிகாலனாக வரும் விக்கிரம், நந்தினியாக வரும் ஐஸ்வர்யா கதா பாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்று உள்ளன. முடிவில் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தாலும் நாவலில் விரிவாக இல்லாதது.
திரைப்படம் என்றால் முடிவில் சண்டைக் காட்சி இருக்க வேண்டும் என்ற பழைய சென்டிமெண்டை இயக்குநர் மணிரத்னமும் மீறவில்லை. சண்டைக் காட்சிக்கு இன்னும் மெனக்கெட்டு இருந்தால் பார்க்கும் படி இருந்திருக்கும்.
நாவலில் நந்தினியின் தந்தை யார் என்பது ஒரு வகையானா வலைப்பின்னலாக இருக்கும். படத்தில் அவளுடைய தந்தை பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தான் என்பதை இயக்குநர் திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார்.நாவலின் முடிவில் நந்தினி மேற்கு நோக்கி சென்று விடுவார்.இதில் தண்ணீர் மூழ்கி இறந்துப் போகிறார்.
நாவலை மனதில் வைத்துக்கொண்டு பார்க்காமல் இருந்தால் பொன்னியின் செல்வன் இரண்டு்ம் சிறந்த படந்தான்.
ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். காமிராவும் கண்களை உறுத்தவில்லை. கல்கி 70 ஆண்டுகளுக்கு முன் ஐந்து பாகங்களாக எழுதிய நாவலை மணிரத்னத்தை தவிர வேறு யார் படமாக்கி இருந்தால் இந்த அளவு வரவேற்பை பெற்று இருக்குமா என்பது சந்தேகந்தான்.
சோழர்கள் வீரத்தை இன்றயை சமூகத்திற்கு காட்சி ஊடகம் வழியே கொண்டு சேர்த்தமைக்கு மணரத்னத்தைப் பாராட்டலாம்.