ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 81லட்சம் மதிப்பிலான 18சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளை.24 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்து 36 கிராம் நகை மற்றும் 18000 பணம் பறிமுதல் செய்த காவல்துறை.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி ஆஷா . இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 25ஆம் தேதி ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் ராமசுப்பிரமணியன் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதற்கு முந்தைய நாள் இரவே பணிக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அன்றிரவு ராமசுப்பிரமணியத்தின் மனைவி ஆஷா மற்றும் அவரது மகன் மட்டும் அறையில் தூங்கி கொண்டிருந்த போது, பக்கத்து அறையில் பீரோ திறக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அந்த அறைக்கு சென்று ஆஷா பார்த்த போது ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்றது தெரியவந்தது. பின்னர் பீரோவை சோதனையிட்ட போது அதில் இருந்த 18சவரன் நகைகள் மற்றும் 1லட்சம் பணம் கொள்ளையடிக்கப்படது தெரியவந்ததையடுத்து, உடனே இது குறித்து ராமசுப்பிரமணியன் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் கைரேகை பதிவுகளை வைத்து தீவிரமாக தேடியுள்ளனர். குறிப்பாக கொள்ளையன் கொள்ளையடித்துவிட்டு பேருந்து மூலமாக தப்பிசெல்வது தெரியவந்தது. சிசிடிவி காட்சியில் பதிவான முக அடையாளங்களை வைத்து கொள்ளையடித்த நபர் பழைய குற்றவாளியான ஆனந்த் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வில்லிவாக்கத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் ஆனந்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர் மீது செல்போன் பறிப்பு, உட்பட பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து கொள்ளையடித்த 34கிராம் நகைகள் மற்றும் 18,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
கொள்ளையடித்த 24மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த நொளம்பூர் காவல்துறையினருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.