மாநிலத்தில் நிலையற்ற அரசாங்கம் அமைந்தால் அதன் கவனம் அதிகாரத்தை காப்பாற்றுவதில் இருக்குமே தவிர, மக்களுக்கு சேவை செய்வதில் இருக்காது என்று கர்நாடக மக்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் கூறியதாவது: சாமானியர்களை பற்றி பேசுபவர்கள், தங்களின் ஊழலை வெளியே கொண்டு வருபவர்கள், தங்களின் சுயநல அரசியலைத் தாக்குபவர்கள் அனைவரையும் காங்கிரஸ் வெறுக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மீது காங்கிரஸின் வெறுப்பு நிரந்தமாகி விடும். இந்த தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் என்னை துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் என்னை 91 முறை பலவிதமாக துஷ்பிரயோகம் செய்துள்ளனர். துஷ்பிரயோகங்களின் அகராதியை உருவாக்குவதற்கு பதிலாக மக்களுக்கு நல்லாட்சி வழங்கி இருந்தால், அவர்களின் நிலை இப்போது உள்ளது போல் பரிதாபமாக இருந்திருக்காது. ஏழைகளுக்காகவும் நாட்டிற்காகவும் பாடுபடுபவர்களை அவமதித்தது காங்கிரஸின் வரலாறு.
கடந்த தேர்தலில் காவலாளி திருடன் என்று பிரச்சாரம் செய்தார்கள். பின்னர் மோடி திருடன் என்று சொன்னார்கள். அதன் பிறகு ஓ.பி.சி. சமூகத்தினர் திருடன் என்று சொன்னார்கள். இப்போது கர்நாடகாவில் தேர்தல் காலம் தொடங்கியுள்ளநிலையில், எனது லிங்காயத் சகோதர சகோதரிகளை திருடன் என்று அழைக்கும் துணிச்சலை அவர்கள் காட்டியுள்ளனர். காங்கிரஸ்காரர்களே, காதுகளை திறந்து கேளுங்கள், நீங்கள் யாரையாவது துஷ்பிரயோகம் செய்தால், உங்களால் தாங்க முடியாது அளவுக்கு அவர்கள் உங்களை தண்டித்திருக்கிறார்கள். இந்த முறை கர்நாடகா தங்கள் பெருமைக்கு ஏற்பட்டுள்ள முறைகேடுகளுக்கு வாக்கு மூலம் பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது. பாபாசாகேப் அம்பேத்கர். வீர் சாவர்க்கரை போலவே அவர்கள் என்னை துஷ்பிரயோகம் செய்வதை பார்க்கும்போது காங்கிரஸ் என்னை மதிக்கிறது என்று உணர்கிறேன். இது எனக்கு கிடைத்த பரிசாக உணர்கிறேன்.
காங்கிரஸ் என்னை துஷ்பிரயோகம் செய்யட்டும், நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். உங்களின் ஆசிர்வாத்தால் அவர்களின் அனைத்து துஷ்பிரயோகங்களும் சேற்றில் கலந்து விடும். எங்கள் மீது எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ அவ்வளவு தாமரை மலரும் என்பதை காங்கிரஸ் மக்கள் புரிந்து கொள்கிறார்கள். நாட்டிலேயே கர்நாடகாவை முதலிடம் பெற, மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி நீடிக்க வேண்டியது அவசியம். இரட்டை என்ஜின் அரசு என்றால் இரட்டை பலன், இரட்டிப்பு வேகம். காங்கிரஸ் வளர்ச்சியில் அரசியல் செய்யும் கட்சி. அதில் எதிர்மறை தன்மை நிறைந்துள்ளது. நிலையற்ற மற்றும் கூட்டணி அரசாங்கங்களின் விளைவுகளை கர்நாடகா எதிர்கொண்டுள்ளது. நிலையற்ற அரசாங்கத்தின் கவனம் மக்களுக்கு சேவை செய்வதில் இருக்காது. இடத்தையோ அல்லது அதிகாரத்தையோ காப்பாற்றும் பயம் காரணமாக உங்களுக்காக எதையும் அவர்களை செய்ய அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.