மே.1
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பதவி காலம் முடிவதை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னை அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு முரளி ராமநாராயணன், மன்னன் ஆகியோர் போட்டியிட்டனர். 2 துணைத்தலைவர் பதவிக்கு 6 பேரும், 2 செயலாளர் பதவிகளுக்கு 6 பேரும், ஒரு இணைச்செயலாளர் பதவிக்கு 4 பேரும், பொருளாளர் பதவிக்கு 4 பேரும், 26 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 77 பேரும் போட்டியிட்டனர்.
நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் மற்றும் நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோர் செயல்பட்டனர்.
இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஆர்யா, ராமராஜன், சசிக்குமார், விஷ்ணு விஷால், எஸ்.வி.சேகர், ராதாரவி, சின்னி ஜெயந்த், மோகன், டெல்லி கணேஷ், அருண் பாண்டியன், காந்த், விக்னேஷ், பொன்னம்பலம், நடிகைகள் ராதிகா, சுஹாசினி ஆகியோர் வாக்களித்தனர். இதேபோல், தயாரிப்பாளர்கள் கேயார், எஸ்.ஏ.சந்திரசேகர், டைரக்டர்கள் டி.ராஜேந்தர், ஆர்.கே.செல்வமணி, நாஞ்சில் அன்பழகன், சித்ரா ல்லட்சுமணன் மற்றும் ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், ஜாக்குவார் தங்கம், விஜயமுரளி உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் உள்ள 1,406 வாக்குகளில் 1,111 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெறுகிறது.