மே.2
வாழ்க்கையில் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ முடியாத சூழல் உள்ள தம்பதிகளை பிரித்து, திருமணத்தை முறிக்கும் அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொதுவாக விவகாரத்து, மணமுறிவு தொடர்பான வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்கள் விசாரிக்கும். சட்டப்பிரிவு 13(ஆ)ன் கீழ், திருமணத்தை கலைக்க மாவட்ட நீதிமன்றத்தில் தம்பதியினர் மனு தாக்கல் செய்ய வேண்டும். இனி, இணைந்து வாழ வழியில்லை என்பதால் மனம் ஒத்து பிரிகிறோம் என்று தெரிவிக்க வேண்டும். 6 மாதங்களுக்கு இந்த மனு திரும்பப் பெறாமல் இருந்தால், நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இருவரையும் விசாரித்து, மனுவில் கூறப்பட்டது உண்மையெனக் கண்டறிந்தால் திருமணத்தைக் கலைப்பதற்கான ஆணைகளை வழங்கும்.
கணவன்/மனைவி அல்லாத வேறு ஒருவருடன் பாலியல் உறவு வைத்திருத்தல், கொடுமைப்படுத்துதல், மத மாற்றம், கைவிரித்து விடுதல், பால்வினை நோய், தொழுநோய், பித்துநிலை, துறவறம் பூணுதல் மற்றும் 7 ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமல் இருத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் விவகாரத்து கோரி தம்பதியினர் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், ஒத்திசைவால் மணமுறிவு செய்யும் தம்பதியினருக்கு இந்த ஆறு மாத காலத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரும் வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது. அதில், இந்து திருமண சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ள எந்தவித முறைகளையும் பின்பற்றாமல், தம்பதியினர் சேர்ந்த வாழவியலாத நிலைக்கு சென்ற திருமணத்தை முறிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளதா என்ற கேள்வி எழுந்தது. கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, ஏ.எஸ். ஓகா, விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், “அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கிய 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மணமுறிவை அறிவிக்கலாம். மேலும், நீதிமன்றங்கள் தங்கள் முன்னுள்ள வழக்குகளின் தன்மைகளைப் பொறுத்து கட்டாய ஆறு மாத கால நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கலாம்” என்று தெரிவித்தனர்.
இருப்பினும், எது மீளமுடியாத நிலையில் உள்ள திருமணங்கள் என்பதற்கான வரையறையை உச்ச நீதிமன்றம் வகுக்கவில்லை. மீளமுடியாத நிலையில் உள்ள திருமணங்கள், கொடுமையிழப்பாக கருத வேண்டும் என்றும், அந்தந்த வழக்கின் தன்மை அடிப்படையில் நீதிபதிகள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.