மே.4
தமிழ் திரைப்படி நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
1953ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி மனோபாலா பிறந்தார். 1979-ல் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் தனது சினிமா வாழ்க்கைத் தொடங்கினார். டிக் டிக் டிக், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்த மனோபாலா, பின்னர் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமடைந்தார். அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராகவும் மனோபாலா இருந்துவந்தார்.
1982-ல் கார்த்திக் நடித்த ஆகாய கங்கை படத்தில் மனோபாலா இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, டிசம்பர் 31, சிறை பறவை, தூரத்து பச்சை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான், மூடுமந்திரம், மல்லுவேட்டி மைனர், வெற்றிப்படிகள், பாரம்பரியம், கருப்பு வெள்ளை, அன்னை மற்றும் 1987ல் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் படம் என 25 படங்களை அவர் இயக்கியுள்ளார். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கிய மனோபாலா, இயக்குநர் எச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படத்தையும், பாம்பு சட்டை என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா, சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த அவர் நேற்று காலமானார். மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.
சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பூதஉடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, அ.தி.மு.க. கலைப்பிரிவு செயலாளர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கலைப்பிரிவு தலைவர் இயக்குனர் லியாகத் அலிகான் உள்ளிட்டோரும் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், நடிகர் விஜய் உட்பட திரையுலகினைச் சேர்ந்த ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மயானத்திற்கு மனோபாலாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது.