மே.6
உலக அளவில் கோவிட்-19 பெருந்தொற்றால் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்குழு அறிவித்துள்ளது.
கோவிட்-19 குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டது. இதனை நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த வாரத்தில் கோவிட் 19 பெருந்தொற்றால் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழந்தனர்.
தற்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு போராடிவருகின்றனர். தொற்றுக்குப் பிறகான பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிரமங்களைச் சந்தித்துக்கொண்டுள்ளனர். இந்த வைரஸ் இங்கே இன்னமும் இருக்கிறது. கோவிட் பெருந்தொற்றின் புதிய வகை வைரஸ்களால் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளன.
தற்போதைய அறிவிப்பின் முக்கிய நோக்கம், இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதுதான். கடந்த 3 ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்து கண்காணித்து வந்த அவசரநிலைக் குழு, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்துள்ளது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, 2019-ன் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கோவிட் 19 பெருந்தொற்று, சர்வதேச சுகாதார பிரச்சினையாக உருவெடுத்தது. இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 4.43 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 5.31 லட்சம் பேர் கோவிட்டிற்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 33,232 பேர் கோவிட் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட் பரவாமல் தடுக்கும் நோக்கில் தடுப்பூசி தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 220 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.