மே.8
டெல்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர்கள் மேற்கொண்டுவரும் 2ம் கட்டப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் ஏராளமானோர் டெல்லிக்கு படையெடுத்த நிலையில், அவர்களை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்திவருகின்றனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் 2 ஆம் கட்ட போராட்டம் 14வது நாளை எட்டியுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக, பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவரை பதவி நீக்கம் செய்து கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டம் நடைபெறும் இடங்களில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றை நிறுத்தி அரசு இடையூறு ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள், போலீசார் தங்களிடம் தேவையின்றி தகராறில் ஈடுபடுவதோடு, குடிபோதையில் தாக்கியதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இப்படி துன்புறுத்துவதற்கு பதிலாக தாங்கள் பெற்ற பதக்கங்களையும் விருதுகளையும் திரும்பப்பெற்றுக்கொள்ளுங்கள் என்று மத்திய பாஜக அரசிற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் மல்யுத்த போட்டிகளுக்கு செலவழித்த விவரங்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் மல்யுத்த போட்டிகளுக்கென ரூ.150 கோடி மத்திய அரசு செலவழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாய சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளன. மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி கண்ட இந்த அமைப்பின் போராட்ட அறிவிப்பால், டெல்லி ஜந்தர் மந்தரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.