மே.11
கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 20-ந் தேதியுடன் முடிவடைந்த வேட்புமனுத்தாக்கலின் இறுதியில், 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதில் ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேரும், பெண் வேட்பாளர்கள் 184 பேரும், திருநங்கை ஒருவரும் ஆவார்.
இந்தத் தேர்தலில் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவில், காலை முதலே மக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். பெங்களூரு மாநகர் உட்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூருவில் எந்தவித வன்முறையும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
காலை 9 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு 8.26 சதவீத வாக்குகளும், நண்பகல் 11 மணி நிலவரப்படி 20.99 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. அதேபோல், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 52.18 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்குப்பதிவில், சுமார் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 80 தொகுதிகளையும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 தொகுதிகளையும் கைப்பற்றின.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவிலும் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே.13ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.