நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களித்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37, 777 இடங்களில் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மாலை 6 மணிநிலவரப்படி, கர்நாடகாவில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 0.31 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஊழியர்கள் 3 பிரிவாக ஈடுபடவுள்ளனர். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர் இருப்பார்கள். ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் ஒதுக்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கபப்பட்டு உள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன.