அண்ணாமலை மீது முதலமைச்சர் அவதூறு வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்பதாக ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்து பேட்டியில், அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடர்ந்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல மாட்டார். முதலமைச்சர் மீது டெண்டர் குற்றச்சாட்டு சொல்லி ஏற்கனவே ஐந்து நபர்கள் சிபிஐக்கு புகார் கொடுத்து இருக்கிறார்கள். முதலமைச்சரின் இந்த வழக்கு தொடுத்து இருக்கும் நடவடிக்கையின் மூலம் அவர் மீது வைக்கப்பட்டிருக்கக்கூடிய குற்றச்சாட்டு விசாரணைக்கு வர அவரே வழிவகை செய்துள்ளார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து பதிலளித்த நிலையில், யார் என்ன சொன்னாலும் பாஜக மீண்டும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கர்நாடகாவை பொருத்தவரை எதிரிகள் இல்லாத சூழ்நிலைதான் உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சார்பில் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் எந்த ஆதாரமும் இன்றி அவதூறு தவறுகளை வெளியிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.