காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை – பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்த புகாரின்பேரில் நடவடிக்கை

மே.12

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு நிதியுதவி அளிப்பதாக வந்த புகாரின் பேரில், காஷ்மீர் மாநிலத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் குழு அதிரடி சோதனை நடத்தியது.

காஷ்மீரை சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி பயங்கரவாத இயக்கத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) மத்திய அரசு விதித்துள்ள இந்த தடை 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

இதற்கிடையே, தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்து வருவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடரந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பட்கம், பாரமுல்லா ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

காஷ்மீரில், ஜி20 நாடுகள் அமைப்பின் சுற்றுலா பணிக்குழு கூட்டம் வரும் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு நடக்கும் முதலாவது மிகப்பெரிய சர்வதேச நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி, பயங்கரவாதிகள், அவர்களது ஆதரவாளர்கள், நிதியுதவி செய்பவர்கள் ஆகியோருக்கு எதிரான வேட்டையை என்.ஐ.ஏ. தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 9-ந் தேதி, காஷ்மீரில் புதிதாக தொடங்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக 16 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதோடு, 10-ந் தேதி, பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொர்புடைய 3 பயங்கரவாதிகளின் சொத்துகளை என்.ஐ.ஏ. முடக்கியது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *