May 13,2023
“பா.ஜ.க, அவர்களின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் அவர்களின் மக்கள் விரோத அரசியல் போக்கால் மக்களால் பின்னுக்கு தள்ளப்படுவார்கள் என்பது தெரியும்” – சித்தராமையா
கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 10-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலைமுதல் நடந்துவருகிறது. நண்பகல் 12.15 மணியளவிளான முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் 121 இடங்களிலும், பா.ஜ.க 71 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும் முன்னனியில் இருக்கின்றன. 113 இடங்களில் வெற்றிபெறும் கட்சி ஆட்சியமைக்கும் என்ற நிலையில், இந்திய அரசியல் வட்டாரங்கள் இந்த தேர்தல் முடிவை கூர்ந்து கவனித்து வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது,” 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவையில் 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று காங்கிரஸ் தனித்து ஆட்சிக்கு வரும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க பிரமுகர்களின் வருகையால் காங்கிரஸ்-க்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தேர்தல் பிரசாரத்தின் போதே…. நரேந்திர மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா என யார் வேண்டுமானாலும் கர்நாடக மாநிலத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
அது கர்நாடக வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, ஏனெனில் மக்கள் பா.ஜ.க, அவர்களின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் அவர்களின் மக்கள் விரோத அரசியல் போக்கால் மக்களால் பின்னுக்கு தள்ளப்படுவார்கள் என்பது தெரியும். காவி கட்சி எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யாததால் மக்களும் அந்த கட்சியால் மகிழ்ச்சியடையவில்லை.
மக்கள் மாற்றத்தை விரும்பினர், அதற்கேற்ப தீர்ப்பை வழங்கியுள்ளனர். நான் போட்டியிட்ட வருணாவில் சுமார் 3 சுற்று வாக்கு எண்ணிக்கைகளுக்குப் பிறகு 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறேன், இன்னும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.