மத்திய புலனாய்வு அமைப்பு எனப்படும் சிபிஐ-யின் இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் இயக்குநராக தற்போது சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பணியாற்றி வருகிறார். இவரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதிய சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் அடங்கிய குழு சிபிஐ இயக்குனரை தேர்வு செய்கிறது. இந்நிலையில், சிபிஐ-யின் இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1986 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட் கர்நாடகா மாநில காவல்துறை தலைவராக பணியாற்றியுள்ளார். தற்போதையை சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், பிரவீன் சூட் சிபிஐ இயக்குநராக பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் இரண்டு ஆண்டு காலத்திற்கு சிபிஐ இயகுநராக பதவியில் இருப்பார். சிபிஐ இயக்குனரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனினும் 5 ஆண்டுகள் வரை அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.