May 15,2023
மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள மதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவர முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரிட்டனில் இருக்கும் பழங்கால பொருள்களை மீட்க மாபெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பிரதமர் மோடியின் அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜங்க மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இதை எழுப்ப வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரத்திற்குப் பின், இந்திய தொல்லியல் துறையானது (ASI) நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன்அதிகாரிகள் லண்டனில் உள்ள அரசு நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து, “படையெடுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட, ஆர்வலர்களால் எடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருட்களை மீட்க முயற்சி செய்து வருகிறது.
அதன்படி, எளிதாக மீட்கும் தன்மை கொண்ட சிறிய அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்பாளர்கள், தானாக முன்வந்து இந்திய கலைப்பொருட்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளனர். எனவே, பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசுகளிடம் மீட்கும் பணியில் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளது. தென்னிந்திய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்கல சிலை தொடர்பாக ஆக்ஸ்போர்டின் அஷ்மோலியன் அருங்காட்சியகத்தை ஏற்கெனவே அரசு அணுகியுள்ளது.