லியோ படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவ்வப்போது வரும் சில அப்டேட்டுகளால் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்கிறார்.
மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்து விட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து படத்தின் அடுத்த அப்டேட்டாக, ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு வேடங்களில் லியோ என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை த்ரிஷாவும், பார்த்திபன் என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை பிரியா ஆனந்த்-ம் ஜோடியாக நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முன் விஜய், அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.