May 16,2023
தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மேற்குவங்கத்தில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது படத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ”தி கேரளா ஸ்டோரி” திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்டது குறித்தும் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும்போது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்றும் பொது அமைதி தொடர்பான விவகாரம் என்பதால், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் தெரிவித்துள்ளதாவது..
“ தமிழ்நாட்டில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை. மாநிலம் முழுவதும் மொத்தமாக 19 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது. மேலும் திரைப்படம் வெளியான திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்க உரிமையாளர்களே படத்தை திரையிடவில்லை. வரவேற்பு இல்லை என்பதால் திரையரங்குகளில் படத்தை நீக்கி விட்டு வேறு படத்தை திரையிடுகிறார்கள். அதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது என தெரிவித்துள்ளது.