May 17, 2023
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை ‘Z’ பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கங்குலிக்கு வழங்கப்பட்டு வந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு காலாவதியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விவிஐபி-யான கங்குலிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு சார்ந்த மறு ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய முடிவின் படி கங்குலிக்கு 8 முதல் 10 போலீஸார் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதி முதல் அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியினருடன் கங்குலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், எம்பி அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு ‘Z பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் மோலோய் கட்டக் ஆகியோர் ‘Z’ பிரிவு பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர்