மே.18
தமிழகத்தில் விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர். என். ரவி கடிதம் எழுதியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஒக்கியார் குப்பம் பகுதியில் கடந்த 13 ஆம் தேதி இரவு விற்ற விஷச் சாராயத்தை குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட சிலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், 30-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய எட்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சமும் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரொக்கமும், தமிழக அரசின் சார்பில் நிவாரண தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஷச்சாராய மரணம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் , கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ள ஆளுநர், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்? கள்ளச்சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.